தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திவரும் போரில் அப்பாவித் தமிழர்கள் நசுக்கப்படாமல் பார்த்துக்கொள்ளும்படி சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வற்புறுத்தியுள்ளார்.
பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அதிபர் ராஜபக்ச பேசியதாகவும், அப்பொழுது பிரதமர் இவ்வாறு கூறியதாகவும் பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.
தங்கள் மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தொடர்ந்து கிடைக்க வழியேற்படுத்துமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ நடவடிக்கையின் மூலம் தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலம் அரசியல் ரீதியான தீர்வு காணும்படி அதிபர் ராஜபக்சவிடம் வலியுறுத்திய பிரதமர் மன்மோகன் சிங், அதனை உடனடியாக மேற்கொள்வதே தற்போதைய சூழலில் மிக அவசரமானது என்றும் கூறியுள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தி அதன்மூலம் இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு அரசியல் ரீதியான தீர்வு காணும் முயற்சியை உடனடியாகத் துவக்குமாறு பிரதமர் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழப்பதை ஏற்க முடியாது என்றும், மீனவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்று சிறிலங்க கடற்படைக்கு உத்தரவிடுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.