மேகாலயா மாநில முன்னாள் முதல்வர் இ.கே. மவ்லாங் உடல்நலக் குறைவால் இன்று மரணமடைந்தார்.
64 வயதான மவ்லாங் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் கடந்த சில மாதங்களாக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து அவரது வீட்டில் மரணமடைந்தார்.
ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் சார்பாக உம்ராய் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மவ்லாங், கடந்த செப்டம்பர் 2000ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2001ஆம் ஆண்டு வரை மேகாலயா மாநில முதல்வராக பொறுப்பு வகித்தார்.
கொல்கத்தாவில் மேகாலயா மாளிகை கட்டுவதில் ஏற்பட்ட ஊழல் பிரச்சனை காரணமாக கூட்டணி கட்சிகளான பா.ஜ.க., தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் மவ்லாங் பதவி இழந்தார். எனினும், கவுகாத்தி உயர் நீதிமன்றம் ஊழலில் அவருக்கு தொடர்பில்லை என்று பின்னர் தெளிவுபடுத்தியது.
மவ்லாங்கிற்கு மனைவி, 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
மவ்லாங் மறைவிற்கு முதலமைச்சர் டோங்குபார் ராய், டி.டி. லபாங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.