ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 36 பேர் பலியானார்கள். இந்த கலவரம் வெடித்த பகுதிகளில் தற்போது நிலைமை இயல்புக்கு திரும்பியுள்ளதால் 7 வாரமாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
காந்தமாலில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி, விஷ்வ இந்து பரிஷத் தலைவர் லட்சுமாணந்த சரஸ்வதியும் அவரது உதவியாளர்கள் 4 பேரும் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது.
இந்த கலவரத்தில் 36 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமனாவர்களின் வீடுகள், தேவாலயங்கள் உடைக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மாவட்டத்தின் 9 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது அப்பகுதிகளில்இயல்பு நிலைமை படிப்படியாக திரும்பி வருவதையடுத்து, 4 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், கடந்த 2 வார காலமாக இப்பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரிஷன் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் மற்ற 5 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் இன்னும் ஊரடங்கு அமலில் உள்ளதாக குறிப்பட்ட அவர், நிலைமையை பொறுத்து அங்கும் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் என்றார்.