நாசிக்: கலவரப் பகுதியான மராட்டிய மாநிலம் துலேயில் 13 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
துலேயில் கடந்த 5 ஆம் தேதியன்று இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்டனர். 170க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த கலவரத்தில் 275 கடைகள் கலவரக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. தொழிற்சாலைகள், வீடுகள் உடைக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டன. கலவரம் தொடர்பாக 407 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கடந்த 5ஆம் தேதி முதல் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்தது. இந்நிலையில் தற்போது நிலைமை சீரடைந்ததையடுத்து ஊரடங்கு உத்தரவு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வணிக, கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படத் துவங்கியுள்ளன. இதனால் துலேயில் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பியுள்ளது.