வயிற்றுவலி பிரச்சினை காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், 7 நாட்களுக்குப் பிறகு இன்று வீடு திரும்பினார்.
பிரபல இந்தி நடிகரான அமிதாப்பச்சன் கடந்த 11 ஆம் தேதி தனது 66-வது பிறந்தநாளன்று கடும் வயிற்றுவலி காரணமாக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் உடல்நிலை பூரணமாக குணமடைந்ததைத் தொடர்ந்து இன்று காலை அவர் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அமிதாப் அங்கு கூடியிருந்த தனது ரசிகர்களை நோக்கி கையசைத்தார். பின்னர் காரில் ஏறி வீடு சென்றார்.
வீடு திரும்பினாலும் தொடர்ந்து அவர் 3 வாரங்களுக்கு பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், உடல்சார்ந்த கடினமான வேலைகளில் ஈடுபடக்கூடாது என்றும் அவருக்குசிகிச்சையளித்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அமிதாப்பிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இன்று காலை அவருக்கு இறுதி பரிசோதனை செய்தனர் என்றும் இதில் அவரது உடல்நிலை பூரண குணம் அடைந்ததைத் தொடர்ந்து வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்றும் லீலாவதி மருத்துவமனை துணை தலைவர் மருத்துவர் நரேத்ர திவாரி கூறினார்.