'ராஷ்டிரீய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா' காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மகப்பேறுக்கும் நிதி உதவி வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே (BPL) இருப்பவர்களின் நலனுக்காக 'ராஷ்டிரீய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா' (RSBY) என்ற காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இத்திட்டம் செயல்படத் துவங்கியது.
பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களின் மூலமாக இத்திட்டத்தை மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. பெரும்பாலும் எல்லா மாநிலங்களும் இந்த காப்பீட்டுத் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்துவதாக கூறியுள்ளன.
தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, குஜராத், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டு அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்ட்) வழங்கும் பணிகளும் நடந்து வருகின்றன. மற்ற மாநிலங்களிலும் ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. கடந்த மாதம் 23ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் இந்த காப்பீட்டுத் திட்டத்திற்காக 3.39 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 1,458 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில், மகப்பேறுக்காகவும் ஆர்.எஸ்.பி.ஒய் திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்குவது குறித்து இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த காப்பீட்டு திட்டத்தில் இருந்து மகப்பேறு பிரிவிலும் பணம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
பயனாளி ஒருவருக்கு ரூ.750 அல்லது அதற்கு குறைவான பிரிமியத் தொகை இருக்கும் பட்சத்தில் இந்த உதவி வழங்கப்படும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள தொழிலாளர்களும் பிரசவத்துக்கு மருத்துவமனைகளுக்கு செல்லும் போக்கு இதன் மூலம் அதிகரிக்கும். அதை நோக்கமாகக் கொண்டே மகப்பேறு உதவியும் ஆர்.எஸ்.பி.ஒய் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.