சிறுநீரகப் பையில் ஏற்பட்ட கல் அடைப்பை நீக்குவதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் புத்த மதத் தலைவர் தலாய்லாமா டெல்லி தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று காலை வீடு திரும்பினார்.
அவர் (தலாய்லாமா) பூரண குணமடைந்து விட்டதாகவும், போதிய ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் சிகிச்சையளித்த மருத்துவர் பிரதீப் சாபே தெரிவித்தார்.
இன்று காலை 9 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த 73 வயதான நோபல் பரிசுப் பெற்ற தலாய்லாமா தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை திருப்திகரமானதாக இருந்ததாக கூறினார்.
வயிற்றுவலி காரணமாக கடந்த 9ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலாய்லாமாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருடைய சிறு நீரகப்பையில் கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவருக்கு கடந்த 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.
வயிற்று வலியால் அவதிப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான லீலாவதியில் அவர் சிகிச்சை பெற்று திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.