பணியில் இருந்து நீக்கப்பட்ட ஜெட் ஏர்வேய்ஸ் தனியார் விமான நிலைய ஊழியர்களின் பிரச்சனை தொடர்பாக மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர்கள் இன்று அந்நிறுவன அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளனர்.
இதற்கிடையே மும்பை விமான நிலையத்துக்கு அருகே "ஜெட் ஏர்வேய்ஸ் விமானங்களை பறக்க விட மாட்டோம்'' என்ற வாசகம் அடங்கிய அட்டைகளை அக்கட்சியினர் வைத்துள்ளனர்.
தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேய்ஸ் வருமான இழப்பு காரணமாக 1,900 ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்து உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயை சந்தித்து நேற்று முறையிட்டனர்.
இந்நிலையில், தொழிலாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்யக்கோரி மஹாராஷ்டிரா நவ நிர்மான் கட்சியின் நிதின் சர்தேசாய், மனோஜ் சவான், கஜானந்த் ரானே, ஸ்வாடி பருலேகர் ஆகிய தலைவர்கள் ஜெட் ஏர்வேய்ஸ் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால், ஜெட் ஏர்வேய்ஸ் விமானங்களை பறக்க விட மாட்டோம் என்று ராஜ்தாக்கரே அந்நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.