பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நள்ளிரவு முதல் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட டாக்சி, ஆட்டோ ஓட்டுனர்கள் மும்பையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
இதுபற்றி மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மும்பை ரிக்ஷா - டாக்சி ஓட்டுனர் சங்கத் தலைவர் சரத் ராவ் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை மும்பையில் இயக்கக்கூடாது என்று அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட டாக்சி, ஆட்டோ ஒட்டுனர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
இது தொடர்பாக சங்க பிரதிநிதிகள் துணை முதல்வர் ஆர்.ஆர். பாட்டிலை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் பாந்த்ராவில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்துக்கு பேரணி செல்ல உள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசின் இந்த திடீர் அறிவிப்பால் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 25 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட டாக்சிகள் பயனற்றதாகிவிடும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கட்டணத்தை உயர்த்துதல், கட்டாயமாக மீட்டர் பொருத்த வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்துதல், இ.எஸ்.ஐ. முறையை அறிமுகப்படுத்துதல், விமான நிலையங்களில் டாக்சி ஓட்டுனர்களுக்கு முன்னுரிமை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெறுவதாக அவர் மேலும் கூறினார்.
இந்த திடீர் வேலை நிறுத்தத்தால் மும்பையில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர்.