உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, மாயாவதி இந்தியாவில் எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாமல் காங்கிரஸ் தொண்டர்கள் தடுப்பார்கள் என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரேபரேலி தனது சொந்த தொகுதி இங்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிய சோனியாவை, அரசியல் நாடகம் ஆடுவதாக மாயாவதி விமர்சித்தார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, பழிவாங்கும் அரசியலில் மாயாவதி தொடர்ந்து ஈடுபட்டால், அவரின் 'பாரத் பிரமான்' சுற்றுப் பயணத்தை காங்கிரஸ் தொண்டர்கள் தடுப்பார்கள் என்று எச்சரித்தார்.
காங்கிரஸ் என்பது ஒரு பேரியக்கம், அது இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிறது என்று கூறிய அவர், பழிவாங்கும் அரசியலில் மாயாவதி தொடர்ந்து ஈடுபட்டால், உத்தரப்பிரதேசத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் அவரை சுற்றுப்பயணம் செய்யவிடாமல் காங்கிரஸ் தொண்டர்கள் தடுத்துவிடுவார்கள் என்றும், சர்வாதிகார போக்கை மாயாவதி கைவிடாவிட்டால் அதற்கான விளைவுகளை அவர் சந்தித்தே தீர வேண்டும் என்றும் மணிஷ் திவாரி எச்சரிக்கை விடுத்தார்.
மாயாவதியின் ஒட்டுமொத்த அரசியல் நடவடிக்கைகளும் அச்சம், பழிவாங்கும் அடிப்படையில் உள்ளதாகவும் அவர் குற்றம்சாற்றினார்.