கான்பூர் வெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கர்னல்கஞ்ச் நகரில் மிதிவண்டி ஒன்றில் பாலிதீன் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு நேற்று மாலை வெடித்தது. இதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு அருகே கடை நடத்தி வரும் கமல் குமார் சாகு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடையில் இருந்து ஏராளமான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் தயானந்த் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
குறைந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு பாலிதீன் பைகளில் மறைக்கப்பட்டு மிதிவண்டியில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
பட்டாசுகளை விற்பனை செய்ய சாகு முறையான உரிமம் பெறவில்லை என்றும் பட்டாசுகளை கடையில் வைத்திருந்த குற்றத்திற்காகவும், சதிகாரர்களுக்கு விற்பனை செய்ததற்காகவும் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பாக மேலும் 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், மிதிவண்டி உரிமையாளரை தேடி வருவதாகவும் மிஷ்ரா கூறினார்.