ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி தங்களுக்கும் சம்பள விகிதத்தில் மாற்றம் வேண்டும் என பாதுகாப்புப் படையினர் போராட்டம் நடத்தி, பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்ட நிலையில், மத்திய காவல் அமைப்பினர் மற்றும் துணை ராணுவப் படையினரும் தங்களுக்கும் அதே சம்பள அடிப்படை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
பாதுகாப்புப் படையினரின் சம்பள உயர்வு குறித்து பிரணாப் முகர்ஜி தலைமையில் 3 அமைச்சர்கள் அடங்கிய குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மத்திய காவல்படையினரும் அதே பிரச்சினையை எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய - திபெத் எல்லை காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை, சஸ்ஹாஸ்த்ர சீமா பால் ஆகிய பிரிவுகளின் தலைவர்கள் உள்துறைச் செயலாளர் மதுக்கர் குப்தாவைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க உள்ளதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் மத்திய காவல்படை, பிஎஸ்எஃப் படையினருக்கும் சம்பள விகிதம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையை உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் எடுத்துக் கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட இருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த செய்தி தெரிவிக்கிறது.