இருதய பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எய்ம்ஸ் மேற்பார்வையாளர் மருத்துவர் டி.கே.ஷர்மா கூறுகையில், அமைச்சர் முன்ஷியின் உடல்நிலை குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. தற்போது அவரது சுவாசம் சீரடைந்துள்ளதால், செயற்கை சுவாசம் அளிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. எனினும் அவர் இன்னும் அபாய கட்டத்தை முற்றிலுமாக கடக்கவில்லை என்றே தாம் கருதுவதாக கூறினார்.
சுவாசம் சீரடைந்திருந்தாலும் தாஸ்முன்ஷிக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. அவரது இருதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சகஜநிலையில் உள்ளது என்றாலும், எப்போது வேண்டுமானாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலைக்கு செல்லலாம் என்பதால் தொடர் மருத்துவக் கண்காணிப்பிலேயே அவர் வைக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர் ஷர்மா கூறியுள்ளார்.
சுவாசக் கோளாறு மற்றும் இருதய பாதிப்பால் அவதிப்பட்ட அமைச்சர் தாஸ்முன்ஷி, கடந்த திங்களன்று அதிகாலை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று வரை செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில், இன்று அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் வந்து தாஸ்முன்ஷியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.