பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் கிரீமி லேயர் பிரிவு ஆண்டு வருவாய் உச்ச வரம்பை மத்திய அரசு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக அதிகரித்த விவகாரம் மீண்டும் உச்ச நீதிமன்ற பரிசீலனைக்கு வந்துள்ளது.
தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான 5 நீதிபதிகள் குழுவினிடத்தில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள், இந்த வருவாய் உச்ச வரம்பு அதிகரிப்பு மத்திய கல்வி நிலையங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முறியடிக்கும் விதமாக உள்ளது என்று கூறியபோது, மீண்டும் நீங்கள் மனு செய்யலாம் என்று அனுமதி வழங்கியது.
இது குறித்து மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் 5 நபர்கள் நீதிபதிக் குழு முன் சமர்ப்பித்த மனுவில் "பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பெரும்பகுதி உயர்மட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு போகுமாறு அரசு கிரீமி லேயர் வருவாய் உச்ச வரம்பை அதிகரித்துள்ளது, இது இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பை முறியடிப்பதாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கிரீமி லேயர் பிரிவினருக்கான வருவாய் உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்த குழு ஒன்றின் அறிக்கையை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இப்படியிருக்கையில் ஒரு ஆண்டிற்குள் உச்சவரம்பை ரூ.4 லட்சமாக எப்படி உயர்த்த முடியும் என்று வழக்கறிஞர் வேணுகோபால் கேள்வி எழுப்பியுள்ளார்.