ரேபரேலி தொகுதி மக்களின் நலனைப் பாதுகாக்க சிறைக்கு செல்லவும் தயங்க மாட்டேன் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சோனியாகாந்தி, தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் அமையவிருக்கும் ரயில் பெட்டி உற்பத்தித் தொழிற்சாலைக்காக லால்கன்ஜி பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிடத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அவரது பயணத்தில் பல்வேறு இடையூறுகளை அம்மாநில முதல்வர் மாயாவதி ஏற்படுத்தியதன் காரணமாக, சோனியாகாந்தி மற்றும் அவருடன் வந்த காங்கிரஸ் பிரமுகர்கள் அதிக தொலைவு சென்று லால்கன்ஜ் பகுதிக்கு வந்தடைந்தனர்.
பின்னர் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலைக்காக தேர்வு செய்த இடத்தை பார்வையிட்ட சோனியா செய்தியாளர்களிடம் பேசுகையில், ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகள் தனக்கும், தனது மகன் ராகுல் காந்திக்கும் தாய்வீடு போன்றதாகும். எங்களை இங்கு வர விடாமல் யாராலும் தடுக்க முடியாது.
ரேபரேலி மக்களின் நலனையும், தொகுதியின் மேம்பாட்டையும் பாதுகாக்க சிறை செல்லவும் தயங்க மாட்டேன் எனக் கூறினார்.
லால்கன்ஜ் பகுதியில் இன்று நடக்கும் பேரணியில் சோனியா காந்தி பங்கேற்றுப் பேசுவார் என்பதை அறிந்த உத்தரபிரதேச அரசு அப்பகுதியில் பதற்றநிலையை பயன்படுத்தி பல்வேறு தடை உத்தரவுகளை பிறப்பித்ததன் காரணமாக அப்பேரணியில் பங்கேற்பதை சோனியா ரத்து செய்த நிலையில், சோனியாவின் உத்தரபிரதேச சுற்றுப்பயணத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை மாயாவதி அரசு செய்தது இரு தரப்பினரிடையிலான அதிப்தியை அதிகரித்துள்ளது.