இருதய பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்ட தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷியின் உடல்நிலை தொடர்ந்து 2வது நாளாக கவலைக்கிடமாக உள்ளது.
இதுகுறித்து எய்ம்ஸ் மேற்பார்வையாளர் மருத்துவர் டி.கே.ஷர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், அபாய கட்டத்தை தாண்டிவிட்டாலும், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்றார்.
எய்ம்ஸ் செய்தித் தொடர்பாளர் குப்தா பேசுகையில், இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தாஸ்முன்ஷி தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
முன்ஷியின் ரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு மற்றும் சுவாசம் ஆகியவை சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாலும், அவரது உடல்நலம் கருதி தொடர்ந்து செயற்கை சுவாசமே அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டிருந்த அவரது இருதயத்தின் இடதுபுறம் தற்போது சீராக இயங்குவதாகவும் இருதய சிகிச்சை பிரிவின் துறைத் தலைவர் மருத்துவர் வி.கே.பெல் கூறியுள்ளார்.
இருதயக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அதிகாலை அமைச்சர் தாஸ்முன்ஷி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.