ஒரிசா மாநிலம் காந்தமால் மாவட்டத்தில் கலவர கும்பலிடம் சிக்கிய மத்திய கூடுதல் காவல் படை (CRPF) காவலர் தடியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
ராய்கியா காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 7 மர்ம மனிதர்கள் கொண்ட கும்பல் மத்திய கூடுதல் காவல் படை காவலர்கள் 2 பேர் மீது தாக்குதல் நடத்தியது.
இவர்களில் ஒருவர் கலவரக் கும்பலை சமாளித்து தப்பினார் என்றும் ஆனால் மற்றொரு காவலர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய கூடுதல் காவல் படை காவலர்களை சூழ்ந்துக் கொண்ட கலவரக் கும்பல் கொல்லப்பட்ட காவலர் தலையில் முதலில் தடியால் அடித்தும் பின்னர் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தியும் கொலை செய்துள்ளதாக அவர் கூறினார்.
மாநிலத்தில் நிலைமை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக அம்மாநில அரசு கூறிவரும் வேளையில், தற்போது புதிதாக ஏற்பட்டுள்ள கலவரம் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத்தைச் (VHP) சேர்ந்த சுவாமி லஷ்மணானந்தா சரஸ்வதி மற்றும் 4 பேர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு கலவரம் நீடித்து வருகிறது. கலவரத்தில் கிறிஸ்தவர்களின் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 36 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.