கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் நேற்றும் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அங்கு பாதுகாப்பு நிலைமையை ஆராய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று பெங்களூரூ வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கட்டாய மதமாற்றம் நடப்பதாகக் கூறி உடுப்பி, மங்களூரு ஆகிய இடங்களில் பஜ்ரங் தளம் உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதல்கள் பெங்களூரூ நகரில் நேற்றும் தொடர்ந்தன. இந்நிலையில் கலவரத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் இன்று பெங்களூரூ வருகிறார்.
பெங்களூரூ வரும் சிவராஜ் பாட்டீலிடம், பெங்களூரூ கத்தோலிக் தேவாலய ஆர்ச்பிஷப் நேரில் சந்தித்து புகார் மனு அளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள், அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகிறது என்று ஆளும் பா.ஜ.க. அரசு குற்றம் சாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.