6-வது சம்பள ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகள் தொடர்பாக ராணுவத்தினர் தெரிவித்துள்ள குறைபாடுகள், அதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழுவால் விரைவில் தீர்க்கப்படும் என்று மத்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட 6-வது சம்பள ஆணையம் தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. அதில், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பதில் முரண்பாடுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த முரண்பாடுகள் பற்றி ஆய்வு செய்ய மத்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய 3 பேர் கொண்ட அமைச்சரவைக் குழுவை கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார்.
புது டெல்லியில் இன்று இதுபற்றி செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த பிரணாப், ராணுவத்தினர் தெரிவித்துள்ள குறைபாடுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் ஆலோசனை செய்துள்ளதாகவும், விரைவில் நிதியமைச்சர் சிதம்பரத்துடன் இதுபற்றி ஆலோசிக்க உள்ளதாகவும் கூறினார்.
பிரதமருடன் செய்த ஆலோசனை பற்றி விவரம் எதுவும் தெரிவிக்காத பிரணாப், இந்தப் பிரச்சனைக்கு தாங்கள் விரைவில் தீர்வு காண்போம் என்று தான் நம்புவதாக கூறினார்.