ஆந்திர மாநிலம் அடிலபாத் மாவட்டத்தில் நடந்த வன்முறையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.
பைன்சா நகரில் கடந்த 10ஆம் தேதி நடந்த தசரா விழா ஊர்வலத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பைன்சா நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அடிலாபாத் மாவட்டம் ஒட்டோலி பகுதியில் நேற்றும் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில்,3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
கலவரம் நடைபெற்ற இடங்களில் தற்போது நிலைமை கட்டுக்குள் அடங்கி இருந்தாலும் பைன்சா நகரில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இதனால், கலவரம் நடைபெற்ற இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, 6 பேர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) விசாரணைக்கு உத்தரவிட ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கலவரப் பகுதிகளைப் பார்வையிட்ட ஆந்திர உள்துறை அமைச்சர் ஜனாரெட்டி தெரிவித்துள்ளார்.