குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு மர்ம மனிதர்கள் ஈ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பிரதீபா பாட்டீல் புனேயில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் கடந்த வெள்ளிக்கிழமை புனே வந்தார்.
இந்தியா உள்பட 71 நாடுகள் பங்கேற்கும் இளையோர் காமன்வெல்த் போட்டி இன்று மாலை புனேயில் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இந்தப் போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், மர்ம மனிதர்கள் பிரதீபா பாட்டீலுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஈ-மெயில் அனுப்பியுள்ளதாகவும், அதில் புனேயில் சுற்றுப் பயணம் செய்யும் பிரதீபா பாட்டீல் மீது எந்த நேரத்திலும், எந்த ரூபத்திலும் வந்து தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஈ-மெயில் கொலை மிரட்டலையடுத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கான பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.