அமெரிக்காவின் நிதிச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் அந்நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக உலக அளவில் வீசி வரும் நிதி நெருக்கடிச் சூறாவளியை இந்தியப் பொருளாதாரம் சமாளிக்கும் என்று நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
“நமது நாட்டின் பொருளாதார அடித்தளங்களும், வங்கி அமைப்பும் உறுதியானவை, எனவே உலக அளவில் வீசி வரும் நிதிச் சூறாவளியைச் சமாளிக்கும் திறன் நமது பொருளாதாரத்திற்கு உள்ளது” என்று கூறியுள்ள நிதியமைச்சர் சிதம்பரம், இது நாம் உருவாக்கிய சூறாவளி அல்ல, ஆனால் அதன் தாக்கத்தை நாமும் எதிர்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள சிதம்பரம், “இந்தப் பொருளாதாரச் சூறாவளியைச் சமாளிக்க மத்திய அரசுடன் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நிதிச் சிக்கலால் உருவாகியுள்ள பணப் புழக்கப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) எடுக்கும் என்று கூறியுள்ள சிதம்பரம், பண வசதி படைத்தோர் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
“பணம் உள்ளோர் செலவும் செய்ய வேண்டும், சேமிக்கவும் வேண்டும். நமது வங்கிகளில் உள்ள சேமிப்புகள் பத்திரமாக உள்ளன. நமது வங்கி அமைப்பு நன்கு முறைபடுத்தப்பட்ட ஒன்று. இதுதவிர பாதுகாப்பான முதலீடுகளிலும், பத்திரங்களிலும் சேமிக்கலாம்” என்று கூறியுள்ளார்.