இந்தியாவும், அமெரிக்காவும் பின்விளைவைப் பற்றி சிந்திக்காமல் அவசரகதியில் மேற்கொண்ட முடிவுதான் அணு சக்தி ஒப்பந்தம். இதனால் இந்தியாவிற்கு வீண் செலவுதான் ஏற்படப் போகிறது என்று இடதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறுகையில், "123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஜார்ஜ் புஷ், '123 ஒப்பந்தத்தில் என்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதை நாங்கள் அப்படியே தவறாது கடைப்பிடிப்போம்' என்று கூறியுள்ளார். இது அவருடைய தந்திரமா கருத்துக்களில் ஒன்று" என்றார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறுகையில், "அணு சக்தி ஒப்பந்தம் குறித்த புரிதலிலேயே இரு நாடுகளிடையே அதிக இடைவெளி உள்ளது" என்றார்.
மேலும், "ஹைட் சட்டம், அமெரிக்காவின் அணு சக்தி சட்டம் மற்றும் பிற சட்டங்களுக்கு இணங்கவே 123 ஒப்பந்தம் அமல்படுத்தப்படவுள்ளது. இதில் அமெரிக்கா தெளிவாகவும், தீர்க்கமாவும் உள்ளது. மத்திய அரசு இதை புரிந்து கொள்ளாமல் 123 ஒப்பந்தத்தில் உள்ளபடி நடக்கத்தான் முனைப்பு காட்டுகிறது. இது இந்தியாவுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
தனது பதவிக் காலம் முடிவடையும் தருவாயில் தான் ஏதோ அரும்பெரும் சாதனையை செய்துவிட்டதுபோல மன்மோகன் சிங் கண்மூடித்தனமாகச் செயல்படுகிறார். ஆனால், ஜார்ஜ் புஷ் தமது நாடு நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் நிலையில் ராணுவம், தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் செயல்படுகிறார்" என்றார் டி.ராஜா.