அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசிற்குத் தோல்வியே கிடைத்துள்ளது. இதை வரலாறு நிரூபிக்கும் என்று பா.ஜ.க. கூறியுள்ளது.
123 ஒப்பந்தத்தைச் சட்டமாக்கும் வரைவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கையெழுத்திட்டுள்ளதை அடுத்து, இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைசும் நாளை கையெழுத்திட உள்ளனர்.
இதுகுறித்துத் தலைநகர் டெல்லியில் இன்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி, "123 ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் சட்டத்துக்கு அதிபர் புஷ் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா அணு ஆயுதச் சோதனை செய்யும் உரிமையை இழக்க நேரிடுமா? என்ற கேள்விக்கு அமெரிக்கா பதிலளிக்கவில்லை. புஷ்ஷும் இந்த விடயத்தில் மெüனமாக இருந்து வருகிறார்.
இதனால் அணு ஆயுதச் சோதனை செய்யும் உரிமையை இந்தியா இழந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. எனவே நமது இறையாண்மை, அணு ஆயுத சோதனை செய்யும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்ய காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்பதும் தெளிவாகிறது" என்றார்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிற்குக் கிடைத்துள்ள தோல்வியை வரலாறு நிச்சயம் நிரூபிக்கும் என்றார் அவர்.