Publish Date: Thu, 09 Oct 2008 (16:46 IST)
Updated Date: Thu, 09 Oct 2008 (16:44 IST)
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் ஜெய்ஷ்- இ முகமது இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.
பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் வனப் பகுதியில் உள்ள வார்போரா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய கூட்டுத் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் ஜெய்ஷ்- இ முகமது இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பாசா என்று தெரிய வந்துள்ளது. மற்றொருவரின் அடையாளம் தெரியவில்லை.
தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் போது, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் வெடித்ததாகவும், சண்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் பாதுகாப்புத் தரப்பு தெரிவிக்கிறது.
தீவிரவாதி பாசா கொல்லப்பட்டுள்ளது ஜெய்ஷ்- இ முகமது அமைப்பிற்கு மிகப் பெரிய இழப்பு என்றும், காவலர்களுக்கும் ராணுவத்திற்கும் மிகப் பெரிய வெற்றி என்றும் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.