பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டுப் படையினரின் சூட்டாதரவுடன் நமது எல்லைக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த மோதலில் நமது படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீரில் இந்திய- பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கடந்த 12 நாட்களில் நடந்துள்ள நான்காவது ஊடுருவல் முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜூரி மாவட்டத்தில் கெரி துணைப் பிரிவுப் பகுதியில் நேற்று நள்ளிரவில் பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டுப் படையினரின் சூட்டாதரவுடன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் குழு ஒன்று ஊடுருவியது.
கெரியில் உள்ள கல்சா கண்காணிப்பு மையத்தில் இருந்து பாகிஸ்தான் படையினரின் தாக்குதலிற்குப் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்த நமது படையினர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதைக் கண்டதும் அவர்களைத் தாக்கத் துவங்கினர்.
இதையடுத்து தீவிரவாதிகள் தங்களின் துப்பாக்கிகளின் மூலம் நமது படையினரின் மீது சுட்டபடி பின்வாங்கினர். நமது படையினரின் அதிரடியான தாக்குதலிற்குத் தாக்குப்பிடிக்க இயலாததால், தீவிரவாதிகள் பாகிஸ்தானிற்குத் திரும்பினர்.
சிறிது நேரமே நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சங்ரோர் மாவட்டத்தைச் சேர்ந்த சிப்பாய் அமர்ஜீத் சிங் கொல்லப்பட்டார்.