ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு எதிரான கலவரங்களின் போது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டது தொடர்பாக வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள கன்னியாஸ்திரியைத் தேடும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகவும், அந்தக் கன்னியாஸ்திரி முன்வந்து குற்றவாளிகளை அடையாளம் காட்டினால் அவருக்கும், அவர் சார்ந்துள்ள சமூகத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் காவலர்கள் கூறியுள்ளனர்.
ஒரிசாவில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி உள்ளிட்ட 5 பேர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதையடுத்து, கிறித்தவர்களுக்கு எதிராக வெடித்த கலவரத்தின் போது, ஏராளமான வழிபாட்டுக் கூடங்களும் தேவாலயங்களும் சேதப்படுத்தப்பட்டதுடன், கந்தமால் மாவட்டத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் குறிப்பிட்ட கன்னியாஸ்திரியிடம் விசாரணை நடத்திக் குற்றவாளிகளைக் கைது செய்ய சிறப்புக் காவற்படைகள் அமைக்கப்பட்டன.
இந்தக் காவற்படைகள் நடத்திய விசாரணையில், கந்தமால் மாவட்டத்தில் பலிகுடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜாகர் கிராமத்தைச் சேர்ந்த சோமநாத் பிரதான் என்பவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்குப் பிறகு இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் குற்றப் பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் யத்தீந்திரா கோயல் தெரிவித்தார்.
கன்னியாஸ்திரி தலைமறைவு!
இதற்கிடையில் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாஸ்திரியைத் தேடும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக உள்துறைச் செயலர் டி.கே.மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் பல்வேறு தனிப்படைகள் கன்னியாஸ்திரியைத் தேடி வருவதாகவும், ஆனால் அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
விசாரணைக்கு உரிய ஒத்துழைப்புத் தருமாறு தேவாலயங்களின் பாதிரியார்கள், ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார் அவர்.
மேலும், சாம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள கன்னியாஸ்திரியின் சொந்த ஊருக்கு காவல் துறை ஐ.ஜி. பி.ராதிகா தலைமையிலான காவற்படையினர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அங்கும் கன்னியாஸ்திரி இல்லை.
கன்னியாஸ்திரியின் வாக்குமூலம் இல்லாமல் குற்றவாளிகளைத் தண்டிப்பது சிக்கலான காரியம் என்று காவல்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.