Publish Date: Wed, 08 Oct 2008 (15:12 IST)
Updated Date: Wed, 08 Oct 2008 (15:10 IST)
நமது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு எல்லாத் தகவல்களும் சென்றடையும் வகையில் கம்ப்யூட்டர், வயர்லெஸ் இணைப்புடன் கூடிய 18,000 பொதுச் சேவை மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகளின் நலத்திட்ட உதவிகள், இது குறித்த தகவல்கள் கிராமப்புற மக்களை உடனுக்குடன் சென்றடையும் நோக்கில் நாடு முழுவதும் ஒரு லட்சம் பொது சேவை மையங்கள் (சி.எஸ்.சி) அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 6 லட்சம் கிராமங்களை உள்ளடக்கி இந்த மையங்கள் அமைக்கப்படும்.
கம்ப்யூட்டர், வயர்லெஸ் இணைப்பு, பிரிண்டர், ஸ்கேனர், யு.பி.எஸ், டெலிமெடிசின் வசதி, புரொஜக்டர் ஆகியவை இந்த மையங்களில் இருக்கும். மிகவும் பின்தங்கிய, கிராமப் பகுதிகளுக்கும் அனைத்து தகவல்கள், சேவைகள் இந்த மையங்கள் மூலம் கிடைக்கும்.
தற்போது நாடு முழுவதும் 18 ஆயிரம் சி.எஸ்.சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து பொது சேவை மையங்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் செயல்பட தொடங்கும்.
அரசு-தனியார் இணைந்து இதற்கென பணிகளை மேற்கொள்கின்றன. இதற்காக நான்காண்டில் ரூ.5,742 கோடி ஒதுக்கப்படும். மத்திய அரசு ரூ.856 கோடி, மாநில அரசுகள் ரூ.793 கோடி வழங்கும். மீதி தொகை தனியார் நிறுவனங்கள் மூலம் பெறப்படும்.