Publish Date: Tue, 07 Oct 2008 (17:08 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (17:07 IST)
காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்றிரவு நடந்த மோதலில் ஹர்கத்- உல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், வெடிக்கத் தயார் நிலையில் உள்ள கையெறி குண்டுடன் மற்றொரு தீவிரவாதி கைது செய்யப்பட்டும் உள்ளார்.
ஸ்ரீநகரில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் வடக்குக் காஷ்மீரில் சோப்பூர் அருகில் சீர் ஜாகிர் என்ற இடத்திலுள்ள வீடொன்றில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்தத் தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினரும், மாநிலக் காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
குறிப்பிட்ட வீட்டைப் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்த போது அதனுள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இரவு முழுவதும் நீடித்த இந்தக் கடும் சண்டையில் ஹர்கத்- உல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி வஹாப் என்ற அலி குபேப் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய இந்தத் தீவிரவாதியிடமிருந்து ஏ.கே. துப்பாக்கி ஒன்று, வெடி பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையில் பாரமுல்லாவில், வெடிக்கத் தயார் நிலையில் உள்ள கையெறி குண்டுடன் தீவிரவாதி ஒருவர் கைது செய்ப்பட்டார். அவரிடமிருந்து ஏ.கே. துப்பாக்கியை இயக்குவது பற்றிய புத்தகம் ஒன்றும், வெடி பொருட்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டன.
Webdunia
Publish Date: Tue, 07 Oct 2008 (17:08 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (17:07 IST)