அசாம் மாநிலத்தில் இரு பிரிவு மக்களுக்கு இடையே நடந்து வரும் கலவரம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் போடோ பழங்குடியின மக்களுக்கும், வங்கதேசத்தில் இருந்து வந்து குடிபெயர்ந்த முஸ்லிம் மக்களுக்கும் இடையே இனக்கலவரம் வெடித்துள்ளது.
இந்த கலவரத்தில் தாரங் மற்றும் உதல்கிரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்னும் மோதல் நீடித்த வண்ணம் உள்ளது. நேற்றும் போடோ தலைவர்கள் சிலர் முஸ்லிம்களால் தாக்கப்பட்டனர்.
இந்த மோதலில் மேலும் 10 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்புக்காக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இன்று ஊடகங்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் தருண் கோகாய், மாநிலத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் இந்த கலவரத்துக்கு போடோ தீவிரவாதிகள் தான் காரணம் என்றும் குற்றம் சாற்றியுள்ளார்.
கலவரப் பகுதிகளில் நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் குடிபெயர்ந்து வந்த முஸ்லீம்கள், வங்கதேசத்தவர்கள் இல்லை என்றும் கூறிய அவர், போடோ இன மக்கள்தான் கலவரத்தை முதலில் தொடங்கினர் என்றும் குற்றம்சாற்றினார்.