நானோ கார் உற்பத்தி தொழிற்சாலையை குஜராத்தில் அமைப்பது குறித்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியுடன், டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா இன்று சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியில், நேற்று மாலை விமானம் மூலம் ரத்தன் டாடா மும்பை சென்றடைந்ததாகவும், இன்று அகமதாபாத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள சான்ந்த் பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அவர் பார்வையிட்ட பின்னர், நானோ கார் தயாரிப்பு ஆலை அமைப்பது குறித்து முதல்வர் மோடியிடம் பேசுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆலை அமைக்கத் தேவையான ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்குவது குறித்து மோடி அரசின் அமைச்சர்கள் இன்று காலை கூடி பேச்சு நடத்த உள்ளதாகவும், டாடா தேர்வு செய்துள்ள நிலம் ஆனந்த் வேளாண் பல்கலைக்கு சொந்தமான இடம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடாவுக்கு தேவையான ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏற்கனவே ஆனந்த் பல்கலை குஜராத் அரசிடம் ஒப்படைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் நானோ கார் தயாரிப்பு ஆலையை நிறுவ கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக தீவிர இடத் தேர்வுப் பணி நடந்து வரும் நிலையில், இன்று குஜராத் முதல்வர் மோடியும், ரத்தன் டாடாவும் சந்தித்துப் பேச உள்ளனர்.
இப்பேச்சுவார்த்தையில் டாடா ஆலையை குஜராத்தில் நிறுவ ரத்தன் டாடா ஒப்புக் கொண்டால் இன்று மாலைக்குள் ஆயிரம் ஏக்கர் நிலத்தை குஜராத் அரசு அவர்களுக்கு வழங்கும் என அம்மாநில அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், குஜராத்தில் டாடா கார் ஆலை நிறுவப்பட்டால் அது மோடி அரசுக்கு மிகப்பெரிய நினைவுப் பரிசாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.