வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் சிறக்கட்டும் : தலைவர்கள் தசரா பண்டிகை வாழ்த்து!
, திங்கள், 6 அக்டோபர் 2008 (18:22 IST)
துர்காபூஜை, தசரா பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நவராத்திரி விழா நாடு முழுவதும் தசரா பண்டிகையாக 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையட்டி, துர்கா பூஜையும் கொண்டாடப்படுகிறது.
குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா தேவிசிங் பாட்டீல் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்த துர்கா பூஜை நன்னாளில் நாட்டு மக்கள் வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் சிறக்க அனைவருக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.உண்மை, நியாயத்துக்கு கிடைத்த வெற்றியின் அடையாளமாகவும் தீய சக்திகளை வெற்றி கண்டதன் அம்சமாகவும் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. நேர்மையான, சகிப்புத் தன்மையுடன் கூடிய பாதையில் நாம் தொடர்ந்து செல்லவும் என்றென்றும் அமைதி, நல்லிணக்கத்துடன் கூடிய சமுதாயத்தை உருவாக்கவும் இந்த நன்னாள் நமக்கு உத்வேகம் அளிக்க வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தீய சக்திகள் அழிந்து நல்ல சக்திகள் வெற்றி பெற்றதை உணர்த்தும் தசரா, துர்கா பூஜை பண்டிகைகளை பல ஆண்டுகளாக இந்தியா கொண்டாடி வருகிறது. இந்தப் பண்டிகைகளை மையமாக வைத்து நடத்தப்படும் திருவிழாக்கள், வழிபாடுகள் ஆகியவை நம் கலாசார பாரம்பரித்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன. நேர்மையான, நியாயமான வழியில் நாம் செல்ல தூண்டுகோலாகவும் விளங்குகின்றன" என்று கூறியுள்ளார்.