வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் போடோஸ் இனத்தவருக்கும் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளவர்களுக்கும் இடையிலான கலவரம் தொடர்கிறது. கலவரத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
உடல்குரி, டராங் மாவட்டங்களில் நடந்த கலவரங்கள் இன்று அருகில் உள்ள சிராங் மாவட்டத்திற்கும் பரவியது. அங்கு மர்ம நபர்களின் தாக்குதலில் கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.
இதைக் கண்டித்து தேசிய நெடுஞ்சாலை 31 (சி)-ல் போடோ மக்கள் மறியலில் இறங்கியதால் போக்குவரத்துக் கடுமையாக பாதிக்கப்பட்டது என்று காவலர்கள் தெரிவித்தனர்.
கலவரங்களுக்கு இதுவரை 40 பேர் பலியாகியுள்ளதாகவும், காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அஸ்ஸாம் மாநில முதல்வர் தருண் கோகோய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுவரை 500 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 4 கம்பெனி எல்லைப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 2 கம்பெனி படையினர் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கலவரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக ஹெலிகாப்டர் ரோந்து முடுக்கிவிடப்பட்டுள்ளது. வன்முறையில் இறங்குவோரைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
உடல்குரி, டராங் மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும், அடிக்கடி ராணுத்தினர் கொடி அணி வகுப்புகளை நடத்தி வருவதாகவும் முதல்வர் கோகோய் தெரிவித்தார்.