கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வெவ்வேறு இடங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் (SIMI) சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, அகமதாபாத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மும்பை, பெங்களூரு காவல் துறையினர் கூட்டாக நடத்திய தேடுதல் வேட்டையில் கடந்த வாரம் தக்ஷின கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில், ஜிலனாபாத், மெஹபூப் நகர், மொனினாபூர் ஆகிய இடங்களில் இருந்து சிமி இயக்கத்தினர் 3 பேரை சிறப்பு புலனாய்வு குழுவினர் காவல்துறை உதவியுடன் கைது செய்தனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட 4 பேர்களில் நவ்சத், அகமது பாவா என்பவர்களின் செல்பேசியில் இருந்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த 3 பேரிடமும் செல்பேசியில் தொடர்ந்து பேசியது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக பெங்ளூரு கொண்டுவரப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.