காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஆயுதமேந்திப் போராடும் அனைவரும் பயங்கரவாதிகள் என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி கூறியுள்ளதைக் வன்மையாகக் கண்டித்துள்ள பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள், அவருக்குக் காஷ்மீரின் வரலாறு தெரியாது என்று குற்றம்சாற்றியுள்ளனர்.
ஜர்தாரியின் கருத்துக்களை வன்மையாகக் கண்டித்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி, "அவருக்கு காஷ்மீரின் உண்மை நிலவரம் தெரியாது." என்றார்.
ஹூரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையது அலி ஷா கீலானி கூறுகையில், "காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் விடுதலைப் போராளிகள்" என்றார். பாகிஸ்தானும் ஏற்றுக்கொண்டுள்ள, காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஐ.நா. நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை ஜர்தாரிக்கு ஞாபகப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும், 1947 முதல் சுயாட்சி உரிமைகள் கேட்டுப் போராடி வரும் காஷ்மீரிகளின் போராட்டங்கள் 1989 வரை அமைதியாகத்தான் நடந்தன. ஆனால் இந்தப் போராட்டங்களுக்கு இந்திய அரசிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஐ.நா. நிறைவேற்றியுள்ள தீர்மானங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டது. இதுவெல்லாம் ஜர்தாரிக்கு நினைவில்லை.
இந்தியாவினால் பாகிஸ்தானிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறியுள்ளதன் மூலம், ஜர்தாரிக்கு இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு சுத்தமாகத் தெரியாது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றார் கீலானி.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்களிடம் கேட்டதற்கு, எந்தக் கருத்தையும் தெரிவிப்பதற்கு முன்பு ஜர்தாரியின் கருத்துக்களை முழுமையாகப் படிக்க வேண்டும் என்றனர்.
ஜர்தாரியின் உருவப் பொம்மை எரிப்பு!
ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், பாரமுல்லாவில் பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடி ஆஷிப் அலி ஜர்தாரியின் உருவப் பொம்மையை எரித்தனர்.
காஷ்மீரிகளை பயங்கரவாதிகள் என்று கூறியதற்காக ஜர்தாரி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற வலியுறுத்திய அவர்கள், சிறிது நேரம் ஜர்தாரிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.