ஜம்மு- காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடும் மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தீவிரவாதிகள் இருவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகரில் அடந்த வனப் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்த காவலர்களும் ராணுவத்தினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
சனுன்டா பகுதியில் காலி என்ற கிராமத்தில் நடந்த தேடுதல் வேட்டையின்போது அங்கு, பூப் குஜ்ஜார் என்பவரின் வீட்டில் அவருக்குத் தெரியாமல் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
நேற்றிரவு முதல் இன்று மதியம் வரை நீடித்த கடும் மோதலில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த மோதலில் பாதுகாப்புப் படையினருக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும், மேலும் தீவிரவாதிகள் யாராவது பதுங்கியுள்ளனரா என்பது குறித்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.