உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் மாற்றுப் பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து பொறியியல் வல்லுநர் குழு ஒன்று ஆய்வு நடத்தி வருகிறது.
மத்திய அரசின் உத்தரவுப்படி நடந்து வரும் இந்த ஆய்வுப் பணியில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 15 பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குழுவினர் 2 வாரங்களுக்குள் ஆய்வை முடித்து அறிக்கை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக வருவாய், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தக் குழுவினர் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ்கோடி, பழைய ரயில் நிலையம், கம்பிப்பாடு, நடுப்பாடு, ஆற்றுஓடை, அரிச்சல் முனை உள்ளிட்ட பகுதிகளில் 70 முதல் 90 மீட்டர் ஆழம் வரை துளையிட்டு மண் எடுத்துள்ளனர்.
மாற்றுப் பாதை குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர் பொறியாளர் குழு அளிக்கும் அறிக்கையை நிபுணர் குழு பரிசீலிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே பகுதியில் ஏற்கெனவே ஆய்வு நடத்தப்பட்டதாகவும், ஆனால் அது இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
புதிய வழித்தடம் குறித்து ஆய்வு நடத்துவது என்று முடிவு செய்யப்படுவதற்கு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்ட அதிகாரிகள், இந்திய தூர்வாரும் கழக அதிகாரிகள் ஆகியோருடன் வல்லுநர் குழுவும் கலந்து கொண்ட விவாதக் கூட்டம் நடந்தது.