கர்நாடகத்தில் கிறித்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் நிலையில், மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அமைதியும் இயல்பு நிலையும் திரும்புவதை உடனடியாக உறுதி செய்யுமாறும் அம்மாநில அரசை மத்திய அரசு எச்சரித்துள்ளது.
கர்நாடகாவில் நிலவும் பதற்றம் குறித்து அம்மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நேற்று ஆளுநர் ராமேஸ்வர் தாகூருடன் ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளதாக இன்று செய்திகள் கூறுகின்றன.
பாட்டீல் தனது பெங்களூரு பயணத்தின்போது கர்நாடக மாநில உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், தலைமைச் செயலர், காவல் துறை இயக்குநர் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.
கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் தேவாலயங்கள், கிறித்தவ வழிபாட்டுக் கூடங்கள், கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பஜ்ரங் தள் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் தொண்டர்கள்தான் இதில் ஈடுபட்டதாகப் பரவலாக குற்றச்சாற்று எழுந்தது.
இதுகுறித்து அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு கூறுகையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தது. வன்முறை, சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் சில சமூகவிரோதிகள் ஈடுபட்டு வருவதாகவும் அரசு கூறியது.
இருந்தாலும், கலவரத்தில் சங் பரிவார் அமைப்புகளுக்குத் தொடர்புள்ளதாக குற்றம்சாற்றியுள்ள மனித உரிமை அமைப்புகள், பஜ்ரங் தள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.