இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹைட் சட்டம், 123 ஒப்பந்தம் ஆகியவற்றில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் சார்ந்துள்ள இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கோண்டலீசா ரைஸ் தலைநகர் டெல்லியில் இன்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றிப் பேசினார்.
சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கூட்டாகச் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
“அமெரிக்க நாடாளுமன்றம் 123 ஒப்பந்தத்த வரைவிற்கு ஒப்புதல் அளித்துவிட்டாலும், இன்னமும் நிர்வாக ரீதியான பல விவரங்களை முறைபடுத்த வேண்டியுள்ளது. நாடாளுமன்றம் நிறைவேற்றிய வரைவை அதிபர் புஷ் பார்த்து, விரைவில் கையெழுத்திடுவார்” என்றார் கோண்டலீசா ரைஸ்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் சிக்கல் எதுவும் இல்லை. நிர்வாக ரீதியான பிரச்சனைகள் காரணமாகத்தான் தாமதமாகிறது என்றார் அவர்.
இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு என்பது இந்தியாவுடன் அமெரிக்க மேற்கொள்ள உத்தேசித்துவரும் விரிவான இருதரப்பு உறவின் ஒரு அங்கமே என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது கோண்டலீசா ரைஸ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.