ஒரிசாவில் மதக் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கந்தமால் மாவட்டத்தில் மர்ம நபர்களால் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கந்தமால் மாவட்டத்தில் சிந்துபங்கா கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்துள்ள மர்ம நபர்கள் 15 வயது சிறுவன் உள்பட இருவரை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், கொலையாளிகளை காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்றும் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 23-இல் வி.எச்.பி. தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதையடுத்து கந்தமால் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் கொல்லப்பட்டதுடன், கிறித்தவ வழிபாட்டுக் கூடங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதற்கிடையில், வன்முறை தொடர்பாக அப்பாவி இந்துக்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், லட்சுமானந்தாவை கொலை செய்தவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென்றும் வி.எச்.பி. வலியுறுத்தியுள்ளது.