ரயில்வேயின் சரக்கு கட்டணம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5 முதல் 7 விழுக்காடு அளவுக்கு உயர்த்தியுள்ளதாக சில தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வேயில் சரக்கு கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்பதை தெளிவாக்குகிறோம் என்றும் கூறியுள்ளது.
சரக்குப் போக்குவரத்து குறைவாக உள்ள காலங்களான ஜூலை 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலத்தில் போக்குவரத்தை அதிகரிக்க 15 விழுக்காடு கட்டண சலுகையை (தள்ளுபடி) ரயில்வே வழங்கி வருகிறது.
மேலும், சரக்குப் போக்குவரத்து அதிக அளவில் தொடங்கும் காலமான அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் இறுதி வரை 5 இல் இருந்து 7 விழுக்காடு வரை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த முறையே கடந்த 3 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது தவிர கூடுதல் கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை.
எனவே ரயில்வேயால் சரக்குப் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானவையாகும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.