ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ தயீபா தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள துர்வானி என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத்தொடங்கினர். அப்போது பாதுகாப்பு படையினர் அவர்களை சரணடையுமாறு வற்புறுத்தினர். ஆனால் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்கியதால் பாதுகாப்பு படையினரும் எதிர்த் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ராய்ஸ் அகமது ஷா, அபு அப்துல்லா என்று லஷ்கர்-இ தயீபா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வருடங்களாகவே இப்பகுதியில் செயல்பட்டு வந்த இந்த 2 தீவிரவாதிகளும் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்களும், ஏராளமான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.