ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் அத்து மீறி நுழைய முயன்ற தீவிரவாதியை எல்லைப் பாதுகாப்பு படையினர் (BSF) சுட்டு வீழ்த்தினர். இதனால் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்ட்டது.
ஜம்மு மாவட்டம், ஆர்.எஸ்.புரா பகுதியில் சர்வதே எல்லை வழியாக நான்கு பேர் கொண்ட கும்பல் இந்திய எல்லைக்குள் நேற்றிரவு ஊடுருவ முயன்றனர்.
அப்போது, ஊடுருவக்காரர்கள் இந்திய எல்லையை நோக்கி சுடத் தொடங்கினர். இதனால் எல்லைப் பாதுகாப்பு படையினரும் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். மற்றவர்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்து தப்பித்துச் சென்றுவிட்டனர் என்று எல்லைப் பாதுகாப்பு படை (உளவுத்துறை) கூடுதல் காவல் துறை துணை தலைமை ஆய்வாளர் (ADIG) ஜே.பி. சக்வான் தெரிவித்துள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடல் எல்லைப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு படையினரின் இந்த அதிரடித் தாக்குதலால் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்த மோதலில் இந்திய தரப்பில் யாருக்கும் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், கடந்த 6 நாட்களில் நடந்துள்ள மூன்றாவது ஊடுருவல் முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.