தொழில் வளர்ச்சியினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் வி.பி. சிங் வலியுறுத்தியுள்ளார்.
வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்து தலைநகர் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் கிஷான் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகளிடம் பேசும்போது அவர் கூறியதாவது:
நமது நாட்டின் தொழில் வளர்ச்சியை வேகப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட 1894-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் விவசாயிகளின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, கால்வாய் போன்ற சமூகப் பயன்பாட்டுத் திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்தியபோது மக்கள் அதை எதிர்க்கவில்லை. ஆனால் பெரும் தொழில் நிறுவனங்கள் மேலும் லாபமடைவதற்காக தங்களின் நிலத்தை அபகறிப்பதைப் பார்க்கும்போது அதை விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதன் விளைவாகத்தான் இன்று நமது நாட்டின் பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தொழில் வளர்ச்சியினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
இவ்வாறு வி.பி. சிங் கூறினார்.