Publish Date: Thu, 02 Oct 2008 (18:12 IST)
Updated Date: Thu, 02 Oct 2008 (18:12 IST)
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 29 பேரை அந்நாட்டுப் கடற்படையினர் கைது செய்தனர்.
குஜராத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் 5 படகுகளில் கட்ச் வளைகுடாவில் உள்ள சர் கிரீக் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை அறியாமல் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அவர்களைச் சுற்றிவளைத்த பாகிஸ்தான் படையினர் 29 மீனவர்களைக் கைது செய்துள்ளனர். மீனவர்கள் அனைவரும் கராச்சி சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இத்துடன் சேர்த்து பாகிஸ்தான் படையினரால் இந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 434 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் கடற்பகுதியில் தெளிவான எல்லை அடையாளங்கள் வைக்கப்பட வேண்டும் என்று தேசிய மீனவர் கூட்டமைப்புச் செயலர் மனீஷ் லோதாரி கோரிக்கை விடுத்துள்ளார்.