தொடர் குண்டு வெடிப்பில் 4 பேர் பலியானதை அடுத்து திரிபுரா மாநிலம் முழுவதும் உச்ச கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாங்கதேச எல்லை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் தீவிர சோதனை நடந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் நேற்று அடுத்தடுத்து 7 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பிற்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சுமார் 856 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய- வங்கதேச எல்லை மூடப்பட்டுள்ளது. எல்லை நுழைவாயிலில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கூடுதல் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரசு அலுவலகங்கள், பொது மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மாநிலக் காவலர்களுடன் துணை ராணுவப் படையினரும் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். முக்கியச் சாலைகளில் சுற்றுக் காவல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் இருந்து தேசியப் பாதுகாப்புப் படையினரும் கொல்கத்தாவில் இருந்து வெடிகுண்டு வல்லுநர்களும் திரிபுராவிற்கு விரைந்துள்ளனர்.
முதல்வர் தலைமையில் ஆலோசனை!
இதற்கிடையில் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் சசி பிரகாஷ், காவல்துறை இயக்குநர் பிரனாய் சஹாயா, துணை ராணுவம், அஸ்ஸாம் ரைபிள், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் காவல்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கோழைத்தனமான தாக்குதல் மாநிலத்தின் வளர்ச்சியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ள மாணிக் சர்க்கார், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹர்கத்- உல் ஜிகாதி இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே அதற்குப் பலிவாங்கும் வகையில் அந்த இயக்கத்தினர் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.