வங்கதேசம் உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
பிரான்சில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி திரும்புகையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், "நமது முழுமையான ஒருமைப்பாட்டைச் சீர் குலைக்ககூடிய சட்டவிரோதக் குடியேற்றத்தின் எந்த வடிவத்தையும் ஊக்குவிக்க முடியாது" என்றதுடன், "இந்த விவகாரம் ஒரு அரசியல் பிரச்சனையாக உருமாறுவதை நான் விரும்பவில்லை. நமது அரசியல் கட்சிகள் இடையில் பிளவை ஏற்படுத்தும் விடயமாக இது மாறிவிடக் கூடாது" என்றும் வலியுறுத்தினார்.
"சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளவர்கள் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில்கூட ஈடுபடுகின்றனர். ஆனால், இதை நான் சர்ச்சைக்குரிய பொருளாகவோ அல்லது விவாதத்திற்குரிய பொருளாகவோ நினைக்கவில்லை. இதை எல்லாக் கட்சியினரும் சேர்ந்து தடுக்க வேண்டும்" என்றார் மன்மோகன் சிங்.