ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சாமுண்ட மாதா கோயிலில் நவராத்திரி விழா துவக்க நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 290 கிலோ மீட்டர் தொலைவில் ஜோத்பூரில் மெஹ்ரான்கார்க் கோட்டையில் உள்ள பழமையான சாமுண்ட மாதா கோயிலில் இன்று காலை 6.00 மணியளவில் நவராத்திரி விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது.
இதைக் காண சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்திருந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஏராளமான காவலர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த யாரோ கோயிலிற்குள் வெடிகுண்டு இருப்பதாக வதந்தியைக் கிளப்பிவிட்டுள்ளனர். இதனால் பதற்றமடைந்த பக்தர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றுள்ளனர். அப்போது கடுமையான நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் மூச்சுத் திணறிப் பலர் உயிரிழந்தனர்.
பலியானோர் விவரங்களை அறியமுடியவில்லை என்றும் பலி எண்ணிக்கையிலும் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும் ஜோத்பூர் மண்டல காவல்துறை ஆணையர் கிரண் சோனி குப்தா தெரிவித்தார். இருந்தாலும், இதுவரை 144 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் அனைவரும் மதுர தாஸ் மதுர் மருத்துவமனை, மகாத்மா காந்தி மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் வதந்தியால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியானதுடன், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.