மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள ரபோடி என்ற பகுதியில் நவராத்திரி திருவிழவை முன்னிட்டு 'பந்தல்' அமைப்பது தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மும்பையை அடுத்துள்ள இந்த பகுதியில் இன்று நவராத்திரி விழா தொடங்குவதை முன்னிட்டு நேற்று நள்ளிரவு ஒரு பிரிவினர் பந்தல் ஏற்பாடுகளை செய்து வந்தனர். இது தங்களது இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி மற்றொரு பிரிவினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால் விழா ஏற்பாடு செய்தவர்கள் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டதைப் போன்றுதான் இந்த ஆண்டும் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தை மோதலாக முற்றியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.
இந்த மோதலில் ஒருவர் நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அந்த இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்ததோடு, இது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.