குஜராத், மராட்டிய மாநிலங்களில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு நிகழ்வில் 5 பேர் பலியானார்கள். 80 பேர் படுகாயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டம், மொடாசா நகரில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியானார்கள். 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
ஜெய்முதீன் கோரி என்ற சிறுவன் பலியானதாக அடையாளம் தெரியவந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் அந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
குஜராத்தில் வெடித்த குண்டு, சமீபத்தில் டெல்லி மெரவுலி பகுதியில் வெடித்த குண்டு வகையை சேர்ந்தது என்றும், நாட்டு வெடிகுண்டு வகையை சேர்ந்தது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து, குஜராத் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள்
பலப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் உஷார் நிலையில் இருப்பதாக, மாநில உள்துறை
அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மராட்டியத்தில் குண்டுவெடிப்பு!
மராட்டிய மாநிலம் மலேகான் நகரில் உள்ள மார்க்கெட்டில் நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 70 பேர் படுகாயம் அடைந்தனர். இருசக்கர வாகனத்தில் இந்த குண்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடித்ததும் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் வாகனங்களை தீ வைத்து கொளுத்தினார்கள். அங்குள்ள காவல் நிலையத்தை கல் வீசி தாக்கினர். இதில் 6 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இவ்விரு நிகழ்வுகளும் கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலைப்
போன்றே, தீவிரவாதிகள் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டுகளை வீசிச்சென்றுள்ளனர் என்று
முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.